கோலாலம்பூர், பிப்ரவரி.18-
கோலாலம்பூர், செந்துல் பகுதியில் பல ஏடிஎம் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சந்தேக நபர் ஒருவர் வங்கி வசதிகளைத் திட்டமிட்டுத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்த இந்தச் சம்பவங்கள், வங்கிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, ஆள் இல்லாத வங்கி கவுண்டர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் எழுப்பியுள்ளன.
ஏடிஎம் சேதச் சம்பவங்களைத் தொடர்ந்து சுமார் 64,000 ரிங்கிட் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
இது குறித்து செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பஸ்ரி சகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜின்ஜாங் செலாத்தானில் உள்ள ஒரு வங்கியில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களின் திரைகள் உடைக்கப்பட்டதாகப் புகார் வந்தது. இதன் நஷ்டம் சுமார் 4,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜின்ஜாங் செலாத்தானில் மேலும் இரண்டு வங்கிகளிலும், ஜின்ஜாங் உத்தாராவில் இரண்டு வங்கிகளிலும் என மொத்தம் நான்கு புகார்கள் வந்தன. இவற்றின் நஷ்டம் சுமார் 60 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் 12 ஏடிஎம் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








