பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.19-
முன்னாள் பத்திரிகையாளர் ரேக்ஸ் டானின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மிரட்டல்கள் விடுப்பதை நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களின் அதீத எதிர்வினைகள் யாருக்கும் பயனளிக்காது என்றும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் ரேக்ஸ் டானுக்கு எதிராக விடுக்கப்படும் மிரட்டல்களைப் பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சைஃபுடின் எச்சரித்துள்ளார்.
பிரிட்டிஷ் அரசியல்வாதி George Galloway பங்கேற்ற காஸா குறித்த பொது விரிவுரையில், ரேக்ஸ் டான் எழுப்பிய கேள்வி இன ரீதியான உள்நோக்கம் கொண்டதாகக் கூறப்பட்டதால் சர்ச்சை உருவானது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ரேக்ஸ் டான், கடந்த சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








