Jan 5, 2026
Thisaigal NewsYouTube
காப்புறுதி என்பது திடீரென பணக்காரர் ஆவதற்கு  வாங்கப்படும் லாட்டரி சீட்டு அல்ல
தற்போதைய செய்திகள்

காப்புறுதி என்பது திடீரென பணக்காரர் ஆவதற்கு வாங்கப்படும் லாட்டரி சீட்டு அல்ல

Share:

ஷா ஆலாம், ஜனவரி.04-

காப்புறுதி அல்லது இன்சுரன்ஸ் என்பது பணக்காரர் ஆவதற்கான எளிய வழி அல்ல. அது திடீரென பணக்காரர் ஆவதற்கு வாங்கப்படும் லாட்டரி சீட்டு அல்ல. மாறாக, அது ஒரு முதலீட்டுத் திட்டம் என்பதை விட ஒரு பாதுகாப்பு வலை என்பதே உண்மையாகும் தக்காஃபுல் ஆலோசகர் முஹமட் ஸாமிர் ஸூபைடி அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஜோகூர் பாரு, தாமான் ஏஹ்சானில் காப்புறுதிப் பணத்திற்காக தனது 48 வயது கணவர் குமரேசன் கணபதியைக் கொல்ல முயற்சி செய்ததாக அவரின் 46 வயது மனைவி N. ஏகவள்ளி, அவரின் 39 வயது காதலன் R. கமலசார்னா ஆகியோர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது தொடர்பில் கருத்துரைக்கையில் முஹமட் ஸாமிர் இதனைத் தெரிவித்தார்.

தனது கணவரைக் கொல்ல முயற்சி செய்வதற்கு முன்னதாக, அவர் பதிவு செய்துள்ள காப்புறுதி பணம் தொடர்பாக மனைவி ஏகவள்ளி அடிக்கடி விசாரித்து வந்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் காப்புறுதி என்பது ஓர் அசம்பாவிதம் நடக்கும் போது, அந்தப் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து குடும்பத்தைக் காக்கவே தவிர, அதன் மூலம் சொத்து சேர்க்க அல்ல என்பதை முஹமட் ஸாமிர் வலியுறுத்தினார்.

காப்புறுதிப் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று கனவு காண்பதை விட, கடன்களை அடைக்கவும், குழந்தைகளின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளை உறுதிச் செய்யவும் அதைப் பயன்படுத்த வேண்டும்.

மக்கள் தங்களின் தற்போதைய வருமானம் மற்றும் குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப காப்புறுதியில் சரியான தொகையைத் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, அதிக இழப்பீடு கிடைக்கும் என்ற பேராசையில் தேவையற்ற பிரீமியங்களைச் செலுத்த வேண்டாம் முஹமட் ஸாமிர் அறிவுறுத்தினார்.

காப்புறுதி ஆலோசகர்கள் சில நேரங்களில் "இழப்பீடு கிடைத்தால் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்" என்று கூறுவதை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், காப்புறுதி என்பது ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மீட்கும் கருவி மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சுருக்கச் சொன்னால், காப்புறுதி என்பது "வாழ்வாதாரப் பாதுகாப்பு" தானே தவிர, "பணக்காரராகும் குறுக்கு வழி" அல்ல என முஹமட் ஸாமிர் விளக்கினார்.

Related News