ஜார்ஜ்டவுன், அக்டோபர்.16-
பினாங்கு, குபுங் உலு, பெனாந்தியில் உள்ள ஈஸ்வரன் தம்பதியரின் இருப்பிடத்தை மாற்றி அமைத்து அவர்களின் குடும்பத்திற்கு தீபாவளி ஒளி ஏற்றப்பட்டு இருப்பதாக பினாங்கு மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் மன்றத்தின் தலைவர் முகமட் ஸக்வான் முஸ்தஃபா கமால் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையில் ஈஸ்வரன் குடும்பத்தினரும் சிறப்பான முறையில் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பினாங்கு மாநிலத்துடன் பெனாந்தி கெஅடிலான் இளைஞர் மன்றத்தினர் இணைந்து ஈஸ்வரன் வீட்டிற்குச் சாயம் பூசப்பட்டு , வீட்டைச் சுற்றி சுத்தம் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்டதாக முகமட் ஸக்வான் கூறினார்.

அது மட்டுமின்றி, ஈஸ்வரன் குடும்பத்திற்குத் தேவையான மின்சாரப் பொருட்களும் வாங்கித் தரப்பட்டன. ஈஸ்வரன் குடும்பத்தினர் அண்மைய காலமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை அங்குள்ள சில நல்லுள்ளங்கள் கெஅடிலான் இளைஞர் மன்றத்திடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில், பினாங்கு மாநில கெஅடிலான் இளைஞர் மன்றத்தால் இயன்ற உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
இனம் மதம் வேறுபாடுயின்றி மனித நேயத்தின் அடிப்படையில் மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதே பினாங்கு மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் மன்றத்தின் கொள்கையாகும்.
எனவே, இவ்வாண்டின் தீபாவளிப் பண்டிகையை ஈஸ்வரன் குடும்பத்தினர் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு கெஅடிலான் இளைஞர் மன்றமும் முக்கிய பங்கு வகித்திருப்பது குறித்து மனநிறைவு கொள்வதாக முகமட் ஸக்வான் குறிப்பிட்டார்.








