கோலாலம்பூர், நவம்பர்.16-
பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் வெளிப்படுத்திய, 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல், உண்மையில் மலேசியக் காவற்படையின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் உறுதிப்படுத்தியுள்ளார். பழங்காலக் கொள்கலன் கடத்தல் முறையைப் பயன்படுத்தும் இந்தச் சிண்டிகேட்டை முறியடிக்க, போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையானது சுங்கத் துறை, எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உட்பட உள்நாட்டு-பன்னாட்டு முகவர் நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமாகச் செயல்படுகிறது.
மேலும், இந்தச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு குறித்துப் பிரதமர் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பான முக்கியமான விசாரணைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். கிள்ளான் துறைமுகத்திலிருந்து சென்று ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட போதைப் பொருள் கொள்கலன் தொடர்பான தடயவியல் அறிக்கைகளை ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு வழங்கி, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை முடுக்கிவிட்டுள்ளது.








