குளுவாங், ஆகஸ்ட்.15-
தனது காதலி மீது பெட்ரோல் ஊற்றி, தீயிட்ட ஆடவர் ஒருவர், தனக்கும் தீயிட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம், ஜோகூர், குளுவாங், சிம்பாங் ரெங்காம் டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது.
கடுமையான தீக்காயங்களுக்கு ஆளான அந்த ஆடவரும், அவரின் காதலியும் தற்போது குளுவாங் என்சே பெசார் ஹஜ்ஜா கால்சோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஒரு கார் எரிந்து கொண்டு இருப்பதாகக் காலை 5.46 மணியளவில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முகமட் நோர் தெரிவித்தார்.
44 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி, தொழிற்சாலை பேருந்திலிருந்து தனது காதலியை வெளியே இழுத்து வந்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டதுடன், தானும் தீயிட்டுக் கொண்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பாஹ்ரேன் நோர் குறிப்பிட்டார்.
இது தற்கொலை முயற்சி என்று சந்தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.








