செயற்கை நுண்ணறிவு, தானியங்கிமயம் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற உலகளாவிய பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்வதில், மனிதவள மற்றும் பொருளாதார மேம்பாட்டின் முக்கிய உந்துசக்தியாக தொழில்நுட்ப மற்றும் டிவிஇடி தொழிற்கல்வி பயிற்சி நிகழ்ச்சி நிரலை 'மடானி' அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.
தேசிய டிவிஇடி தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித வள அமைச்சின் கீழ் உள்ள பயிற்சி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 95.5 விழுக்காட்டை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் ஜூலை மாத சேர்க்கைக்காக நாடு முழுவதும் உள்ள 315 டிவிஇடி பயிற்சி கழகங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
செமிகண்டக்டர், ரோபோடிக்ஸ், சைபர் பாதுகாப்பு மற்றும் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் போன்ற 11 முக்கிய துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, புரோட்டான், பெட்ரோனாஸ், ஹுவாவே போன்ற முன்னணி நிறுவனங்களுடன் வியூக கூட்டுறவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பினாங்கில் ஜப்பான் – மலேசிய தொழில்நுட்ப பயிற்சி கழகத்தில் 'மனித வள அமைச்சு செமிகண்டக்டர் அகாடமி' நிறுவியுள்ளது. பி40 பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பூர்வகுடிகள் மற்றும் கிராமப்புற சமூகத்தினர் என அனைவரும் பயன்பெறும் வகையில் 'மடானி உள்ளடக்கிய டிவிஇடி' அணுகுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக 2006 ஆம் ஆண்டு தேசிய திறன் மேம்பாட்டுச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.








