தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தாமதமின்றி, உடனுக்குடன் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரா, பாசிர் பெடாமார் தொகுதி ஜசெக சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் வலியுறுத்தியுள்ளார்.
தெலுக் இந்தான் நகராண்மைக்கழகத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முகமட் ஃபைசல் காசிம் மை இன்று காலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தபோது வூ கா லியோங் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இச்சந்திப்பின் போது, வெள்ளப் பெருக்கு மற்றும் குப்பைக்கூளங்கள் பிரச்சினைகள் போன்ற மக்களின் அன்றாடத் தேவைகளைத் தள்ளிப்போடாமல், முறையான திட்டமிடலுடன் உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக வூ கா லியோங் தெரிவித்தார்.
மேலும் தெலுக் இந்தான் எம்.பி.யும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ஙா கோர் மிங் மேற்பார்வையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொது உள்கட்டமைப்புகளைப் பாதுகாத்து, முறையாகப் பராமரிக்கும் மனநிலைக்கு தெலுக் இந்தான் நகராண்மைக்கழகம் மாற வேண்டும் என்றும், 'மடானி' அரசின் இலக்குகளை அடைவதற்கும் மக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கும் அனைவரும் ஒரு வலுவான குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வூ கா லியோங் வலியுறுத்தியுள்ளார்.











