கோலாலம்பூர், டிசம்பர்.29-
மருத்துவப் படிப்பிற்கான பட்டம் பெறாத நபர்கள், தங்களை 'டாக்டர்' என்று அழைத்துக் கொள்வது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் செயல் என மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்ஏ MMA கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறையாக மருத்துவப் பட்டம் பெறாதவர்கள், தங்களை 'டாக்டர்' என்று அடையாளப்படுத்திக் கொள்வது நோயாளிகள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது மக்கள் சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதைத் தடுக்கக்கூடும் என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜு எச்சரித்துள்ளார்.
முறையான மருத்துவத் தகுதி இல்லாதவர்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகள் அல்லது சிகிச்சைகள் மக்களின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். குறிப்பாக சமூக வலைதளங்களில் தங்களை மருத்துவர்கள் என்று கூறிக் கொண்டு சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டாக்டர் திருநாவுக்கரசு நினைவுறுத்தியுள்ளார்.








