ஓர் இந்திய முதியவர் ,கைகால்கள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டு பிக்கப்பட்டுள்ளது. கெடா, கோலகெட்டில் தாமான் டேசா பிடாராவில் உள்ள தனது வீட்டின் கட்டிலில் 71 வயதுடைய அந்த முதியவர் பிணமாக கிடந்தது, நேற்று மாலை 3 மணியளவில் அண்டை வீட்டுக்காரர்களுக்கு தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கண்ணன் சகாதேவன் என்று அடையாளம் கூறப்பட்டது. அந்த முதியர் கொலை செய்யப்படுதற்கு முன்னதாக அவரின் வீட்டிலிருந்து ஒரு தங்கச் சங்கிலி, ஒரு மோதிரம், அவரின் பணப்பை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் மாமாட் தெரிவித்தார்.
அண்டை வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவை சோதனையிட்டப் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள், அந்த முதியவரின் வீட்டிலிருந்து யமாஹா Y15 ரக மோட்டார் சைக்கிளில் அவசர அவசரமாக வெளியேறுவது தெரியவந்துள்ளது. புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த முதியவரின் உடல் அலோர் ஸ்டார்,சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது கொள்ளையடிக்கும் நோக்கில் நிகழ்ந்த கொலையாகும் என்று ஷம்சுடின் மமாட் குறிப்பிட்டார்.மனைவி இறந்தப் பின்னர் அந்த முதியவர் தனியொரு நபராக அந்த வீட்டில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோலகெட்டிலில் 23 மற்றும் 25 வயதுடைய இரு இந்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு ஏதுவாக அவர்களை தடுத்து வைப்பதற்கு எஸ்ஐகே மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாக ஷம்சுடின் மமாட் தெரிவித்தார்.







