அலோர் ஸ்டார், ஜனவரி.05-
கெடா மாநிலத்தில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று கைது செய்துள்ளது.
கெடா மாநில ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் மீதான ஊழல் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் முரண்பாடான சாட்சியம் அளித்ததற்காக அந்த முன்னாள் மாவட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் கீழ் கைது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர், திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட முன்னாள் மாவட்ட அதிகாரி, ஒரு முக்கிய சாட்சியாக இருந்தார். நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பது அல்லது விசாரணைக்கு முரணாகப் பேசுவது சட்டப்படி குற்றமாகும்.
கைது செய்யப்பட்ட அந்த முன்னாள் மாவட்ட அதிகாரியை விசாரணைக்காக நாளை செவ்வாய்க்கிழமை வரை 2 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு எஸ்பிஆர்எம், நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.








