Aug 5, 2026
Thisaigal NewsYouTube
பெர்கேசோ மோசடி: பேராக்கில் இரு நிறுவன உரிமையாளர்கள் மீது 25 குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

பெர்கேசோ மோசடி: பேராக்கில் இரு நிறுவன உரிமையாளர்கள் மீது 25 குற்றச்சாட்டுகள்

Share:

சமூக பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோவின் "டாயா கெர்ஜாயா 2.0" ஊக்கத்தொகைத் திட்டத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடி செய்ததாக, பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரு நிறுவன உரிமையாளர்கள் மீது ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

50 வயது நியோ வோய் லீ மற்றும் 53 வயது ஷரீன் நூர்டின் டேவிட் நூர்டின் ஆகிய இரு துப்புரவு நிறுவன கூட்டுரிமையாளர்களும் நீதிபதி ஐனுல் ஷஹ்ரின் முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

இவ்விருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெர்கேசோவை ஏமாற்றும் நோக்கில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.அர்.எம் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

எனினும் இருவரும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களுக்கு தலா 8 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டு, வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பெர்கேசோ குழும நிர்வாகி டாத்தோ ஸ்ரீ முகமத் அஸ்மான் அஜீஸ், தங்கள் நிறுவனத்தின் உளவுத்துறை மூலமாக இந்த மோசடி கண்டறியப்பட்டதாகக் கூறினார். மேலும், இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 426 முதலாளிகள் பற்றிய விரிவான விவரங்கள் மேல் நடவடிக்கைக்காக எஸ்.பி.அர்.எம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related News