நாடெங்கிலும் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் சுமார் 25.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதில் 26.6 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகள் மற்றும் 24,000 லிட்டருக்கும் அதிகமான மதுபானங்கள் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சுங்கத்துறையின் ஓப்ஸ் A.S.A.P II நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் 445 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு உதவி தலைமை இயக்குநர் ரைஸாம் செதாபா தெரிவித்துள்ளார்.
சுங்கவரி செலுத்தப்படாததாக சந்தேகிக்கப்படும் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களை கடத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு, அதற்கான சுங்கவரி மற்றும் வரிகளையும் சேர்த்து 25.77 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.








