சிஸ்வா பிறை 2026 திட்டத்தின் கீழ் 40 மாணவர்களுக்கு இலவசமாக புதிய மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 2,000 ரிங்கிட் மதிப்பிலான மடிக்கணினி வழங்கப்பட்டதாகவும், இதன் மொத்த மதிப்பு 80,000 ரிங்கிட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2026-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக தனிப்பட்ட முறையில் சுமார் 3 லட்சம் ரிங்கிட் வரையில் செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உதவிகள் எந்தவொரு அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இருந்தும் வழங்கப்படவில்லை என்றும், அரசியலுக்கு வருவதற்கு முன்பு தமது நிறுவனப் பணிக் காலத்தில் சேமித்த தனிப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் சிஸ்வா பிறை திட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாகவும், கல்விக்கான தமது உறுதிப்பாட்டை இது பிரதிபலிப்பதாகவும் சுந்தராஜூ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாணவர்களின் குடும்பம் அல்லது பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கவும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், “கல்வியில் முதலீடு செய்வது நமது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்” என்றும் சுந்தராஜூ சோமு தமது முகநூல் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.








