கோலாலம்பூர், ஜனவரி.16-
கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி, உலு கிள்ளான், தாமான் ஹில்வியூவிலுள்ள வீடு ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தைத் திருடியதாக நம்பப்படும் மூன்று நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 2 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை நடந்த அன்று மதியம் 12.15 மணியளவில், அவ்வீட்டின் பணியாளர் ஒருவர், சமையலறைக்குச் சென்ற போது, அங்கிருந்த கதவானது உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், அவ்வீட்டின் படுக்கையறையில் இருந்த பாதுகாப்புப் பெட்டகம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்ததாக அம்பாம் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்துள்ளார்.
அப்பெட்டகத்தில் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் இருந்ததாகவும் கைருல் அனுவார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட சந்தேக நபர்கள் 6 பேரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.








