ஜாசின், பிப்ரவரி.06-
2024 ஆகஸ்ட் மாதம் மலாக்கா, ஜாசின் நகரில் முகமூடி கும்பலால் எம். வினோத் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குடும்பத்தினர் ஓராண்டாக நீதிக்காகப் போராடி வருகின்றனர். விசாரணையில் 8 பேர் கைது செய்யப்பட்டாலும், ஆதாரமின்மையால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் சுதந்திரமாக உலவுவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிரட்டல் வருவதாகவும் வழக்கறிஞர் டேனியல் சவரிமுத்து குற்றம் சாட்டியுள்ளார். எனவே, சட்டத்துறை அலுவலகம் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நேரடியாக தலையிட்டு, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வினோத்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது சகோதரர் வினோத்திற்கு ஏற்பட்ட கொடூரம், தங்களை இன்னமும் அச்சத்தில் உறைய வைத்துள்ளதாக அவரின் 22 வயது சகோதரர் எம். தேவராஜ் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று வினோத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கும் துரத்தி வந்த அக்கும்பல் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் குறித்து அவரின் மனைவி சரஸ்வதி கூறுகையில், தனது கணவர் குழந்தையைப் பார்ப்பதற்கு முன்பே கொல்லப்பட்டதாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவது தங்களுக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளின் அடையாளம் தெரிந்தும், சிசிடிவி (CCTV) காட்சிகள் இருந்தும் போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்படுவதைக் குடும்ப வழக்கறிஞர் டேனியல் சவரிமுத்து சாடியுள்ளார்
"தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்" எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வழக்கை புக்கிட் அமான் மற்றும் சட்டத்துறை அலுவலகம் நேரடியாகக் கண்காணித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








