மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் மற்றும் பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்தில்லா ஆகியோர் கோலாலம்பூரில் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
மெனாரா மெர்டேக்கா மேபேங்க் கட்டடத்தின் 118-ஆவது மாடியில் காலை 10.40 மணியளவில் நடைபெற்ற திருமணத்தை முன்னாள் சமய விவகார அமைச்சர் ஸுல்கிஃப்லி முஹமட் அல்-பக்ரி நடத்தி வைத்தார்.
சையிட் சாடிக், பெல்லாவுக்கு 500 ரிங்கிட் மணமகள் கொடை, தங்க மோதிரம் மற்றும் ஏழு தட்டுகளில் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
சுமார் 300 பேர் கலந்து கொண்ட இத்திருமணத்தில், முன்னாள் பிரதமர்கள் டான் ஶ்ரீ முஹ்டின் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப், முன்னாள் துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
மேலும், இந்த விழாவில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, கெப்பிடல் ஏ தலைமைச் செயல் அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் மற்றும் சிங்கப்பூரின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இத்தம்பதியரின் திருமண வரவேற்பு வரும் அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள மலேசிய அனைத்துலக வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 25-ஆம் தேதி மூவாரிலும், அக்டோபர் 31-ஆம் தேதி கோத்தா கினபாலுவிலும் பொதுமக்களுக்கான திருமண விருந்து நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் 28-ஆம் தேதி சபாவில் உள்ள மவுண்ட் கினபாலு மலையின் உச்சியில் பெல்லாவிடம் சையிட் சாடிக் தனது காதலைத் தெரிவித்து, திருமண நிச்சயதார்த்தத்தையும் அறிவித்திருந்ததையடுத்து, இன்று அவர்களது திருமணம் இனிதே நடைபெற்றது.








