Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

மலேசியாவில் குறைந்தபட்ச ஊதியத்தை 2,000 ரிங்கிட் ஆக உயர்த்துவது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், ஊழியர் சேமநல நிதியமான இபிஎஃப் உறுப்பினர்களின் ஓய்வுக்காலச் சேமிப்பையும் வலுப்படுத்தும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி அஹ்மாட் ஸுல்கார்னாயின் ஓன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களில் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதிய வரம்பை 3,400 ரிங்கிட் ஆக உயர்த்தும் முயற்சிக்கும் இபிஎஃப் ஆதரவு தெரிவித்துள்ளது.

2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், 18 வயதை எட்டும் மலேசியக் குடிமக்களைத் தானாகவே இபிஎஃப் உறுப்பினர்களாகப் பதிவு செய்யும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

மின்னணு வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உணவு, பொருள் விநியோக ஓட்டுநர்களுக்கான ஐ-சராஆன் பிளஸ் திட்டமும் தொடரும்.

இதன் கீழ், தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 600 ரிங்கிட் வரையிலும், வாழ்நாள் முழுவதும் 6,000 ரிங்கிட் வரையிலும் அரசாங்கத்தின் 20 சதவீத இணை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வுக்காலச் சேமிப்பைத் திட்டமிட்டு பயன்படுத்துமாறு இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐ-எமாஸ் திட்டத்தின் கீழ், 55 மற்றும் 60 வயதில் பெறக்கூடிய சேமிப்புத் தொகையை ஒரே முறையில் முழுமையாகப் பெறுவதற்குப் பதிலாக, மாதாந்திரத் தவணைகளாகப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இபிஎஃப்-இல் தொடர்ந்து வைத்திருக்கும் சேமிப்புக்கு ஆண்டுதோறும் ஈவுத்தொகை கிடைப்பதால், ஓய்வுக்காலத்தில் நீண்டகால வருமானத்தைப் பெற இது உதவும் என அஹ்மாட் ஸுல்கார்னாயின் ஓன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →