உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பது, வாழ்க்கைச் செலவீன சுமையைக் குறைப்பது, நிதி ஒழுக்கத்தைப் பேணுவது ஆகியவற்றுக்கு இடையே 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமநிலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தொழில்துறை நிறுவனங்களும் ஆய்வு அமைப்புகளும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.
மேலும், மலேசியாவின் முதலீட்டுச் சூழலை வலுப்படுத்துவதுடன், நீண்டகாலப் பொருளாதார மீள்திறனை மேம்படுத்தும் நோக்கமும் இதில் இடம்பெற்றுள்ளதாக அவை குறிப்பிட்டுள்ளன.
இது குறித்து எம்பேங்க் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி லிங் கூறுகையில், உலகளாவிய சவாலான சூழலில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான நடைமுறைத் திட்டமாக 2027 வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிதிப் பொறுப்புணர்வை இழக்காமல் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் இந்த வரவு செலவுத் திட்டம், குடும்பங்களும் நிறுவனங்களும் தங்களின் செலவுகள் மற்றும் முதலீடுகளைத் திட்டமிடுவதற்கு நம்பிக்கையை அளிக்கும் என்றார்.
மேலும், அதிகரிக்கப்பட்ட ரொக்க உதவிகள், வரிச் சலுகைகள் மற்றும் ஊதியம் தொடர்பான நடவடிக்கைகள் குடும்பங்களின் வாங்கும் திறனைப் பாதுகாத்து, தனியார் நுகர்வை ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், முக்கியத்துவம் வாய்ந்த துறைகள், துணிகர முதலீட்டு நிதிகள், நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, எரிசக்தி மாற்றம் மற்றும் ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், வட்டார விநியோகச் சங்கிலியில் மலேசியாவின் பங்கை வலுப்படுத்துவதுடன் அதிக மதிப்புள்ள முதலீடுகளையும் ஈர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே யுஓபி மலேசியா UOB நிறுவனமானது, பொருளாதார வளர்ச்சி, போட்டித்திறன், நிலைத்தன்மை மற்றும் நிதிப் பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடையே நடைமுறை ரீதியான சமநிலையை இந்த வரவு செலவுத் திட்டம் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், உயர் மதிப்புள்ள தொழில்துறைகள் மற்றும் எரிசக்தி மாற்றம் ஆகியவற்றில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவது, மலேசியாவின் நீண்டகாலப் போட்டித்திறனையும் முதலீட்டாளர்களைக் கவரும் திறனையும் மேம்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், புவிசார் அரசியல் பதற்றங்கள், உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசின் நிதிநிலைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழலில் இந்த வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கஸானா ரிசேர்ச் இன்ஸ்டிடியுட் வெகுவாகப் பாராட்டியுள்ளது.








