கோலாலம்பூரில் 120 புதிய பசுமைப் பகுதிகளை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள பூங்காக்களைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நகரின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக 400 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக பிரதமர் துறைக்கான கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு மூடப்பட்ட நடைபாதைகள் மற்றும் பாதசாரிகளுக்கான வழித்தடங்கள் அமைத்தல், லெஸ்தாரி நியாகா திட்டத்தைத் தொடர்தல், மக்கள் குடியிருப்புத் திட்டங்களான பிபிஆர் கட்டடங்களுக்கு மீண்டும் வர்ணம் பூசி குடியிருப்பாளர்களின் நலனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புக்கிட் கியாரா பகுதியில் உள்ள 40 ஹெக்டேர் குத்தகை நிலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மத்திய பூங்காவாக அறிவிக்கும் நடவடிக்கையும் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என ஹான்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கூட்டரசுப் பிரதேசங்களில், உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் நாடக நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கேளிக்கை வரி விலக்கு வழங்கப்படுவது, உள்ளூர் கலைத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் திரைப்படம், இசை மற்றும் படைப்பாற்றல் உள்ளடக்கத் துறைகளுக்கு ஆதரவளிக்க 130 ரிங்கிட்டிற்கும் மில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அன்வார் நேற்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.








