மலேசியாவில் நீடித்து வரும் புகைமூட்ட பாதிப்பைப் பொது சுகாதார அவசரநிலையாக அரசாங்கம் கருத வேண்டும் என்றும், திறந்தவெளியில் குப்பைகள் மற்றும் கழிவுகளை எரிப்பதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் விவேகானந்தா சுகுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் எல்லை தாண்டிய புகைமூட்ட தடுப்புச் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், தூதரகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மேக விதைப்பு நடவடிக்கைகளுடன் அரசாங்கம் நின்றுவிடாமல், காற்று மாசுபாட்டிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க விரிவான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் மன்ற குற்றவியல் சட்டக் குழுத் தலைவருமான விவேகானந்தா சுகுமாறன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புள்ளவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரே வாரத்தில் ஆஸ்துமா பாதிப்புகள் 259 சதவீதமும், மேல் சுவாசப் பாதைத் தொற்றுகள் 124 சதவீதமும் அதிகரித்ததாக சுகாதார அமைச்சின் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தொலைபேசியில் பேசியதையும், மேக விதைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டதையும் வரவேற்ற அவர், அவை மட்டுமே போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.








