கூலிம், மே.24-
முன்னாள் திட்ட நிர்வாகியான 35 வயது இந்திய ஆடவர் ஒருவரிடமிருந்து, 3 லட்சத்து 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 6.3 கிலோ கிராம் ‘ஷாபு’ வகையை சேர்ந்த போதைப்பொருளை கூலிம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருளின் அளவு 31 ஆயிரத்து 500 பேரின் பயன்பாட்டுக்கு இணையானது என்று கூலிம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி தெங்கு முஹமட் ஃபைஸால் தெரிவித்தார்.
கடந்த மே 22 நள்ளிரவு, ஜாலான் தாமான் கெனாரி ஓரத்தில் நின்ற பெருடூவா ஆக்சியா காரை சோதனையிட்ட போது, இரு பைகளில் இருந்த 9 பொட்டல போதைப்பொருட்களும், டிஜிட்டல் தராசும், 400 ரிங்கிட் ரொக்கமும் சிக்கின என்று தெங்கு முஹமட் ஃபைஸால் செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

அண்டை நாட்டு நபர் மூலம் கிடைத்த இப்போதைப்பொருளை உள்ளூரில் விநியோகிக்க முயன்ற இந்நபருக்கு, ஏற்கனவே ஒரு குற்றப் பின்னணி உள்ளது. சிறுநீர் சோதனையில் அவர் Methamphetamine போதைப்பொருளை உட்கொண்டதும் உறுதியானது என தெங்கு முஹமட் ஃபைஸால் குறிப்பிட்டார்.

சந்தேக நபர், மே 28 ஆம் தேதி வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அவர் விளக்கினார்.








