கோலாலம்பூர், டூத்தா சுங்கச்சாவடியில் கடந்த செப்டம்பர் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த போதைப்பொருள் சோதனை நடவடிக்கையில், இரு வர்த்தக வாகன ஓட்டுநர்கள் மெத்தாம்பெத்தாமின் வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவின் இயக்குநர் ஹாமிடி அடாம் வெளியிட்டுள்ள தகவலில், தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகேவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்தs சோதனையில் மொத்தம் 48 பேரிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதில் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்ட இரு ஓட்டுநர்களும், மேலதிக பரிசோதனை மற்றும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடைமுறைகளின்படி, அவர்கள் போதைப்பொருள் அடிமைகள் என்பது உறுதி செய்யப்பட்டால்,சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவு 36-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹாமிடி அடாம் தெரிவித்துள்ளார்.








