2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், சிறு தொழில்முனைவோருக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சிறு தொழில்முனைவோர், உதவி பெறத் தகுதியானவர்களைப் பரிந்துரைக்கலாம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
உதவி உண்மையாகத் தேவைப்படுபவர்களையும், தங்களது தொழிலை விரிவுபடுத்தும் திறன் கொண்ட சிறு வியாபாரிகளையும் சென்றடைவதை உறுதி செய்ய இந்தப் பரிந்துரைகள் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2027 வரவு செலவுத் திட்டத்தில், இந்தத் தொழில்முனைவோருக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க விரும்புவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அனாக் புக்கிட்டில் நேற்று நடைபெற்ற கெடா உசாஹாவான் பங்கிட் திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அன்வார், சிறு தொழில்முனைவோர் நடத்தும் பல கடைகள் மூலம் உள்ளூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அவர்களுக்கு வழங்கப்படுவது உதவி சிறியதாக இருந்தாலும், அவர்கள் கடினமாக உழைத்து அந்த உதவியை உண்மையாக மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பரிந்துரைகள் கிடைத்த பிறகு, தேவையுள்ள சிறு தொழில்முனைவோருக்கு உதவுவதற்கான சிறந்த வழிமுறையை ஐசியு எனப்படும் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு தீர்மானிக்கும் என்றும் அன்வார் விவரித்துள்ளார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1,500 தொழில்முனைவோர் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்து கொண்டு, மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
உசாஹாவான் பங்கிட் திட்டத்தின் மூலம், தொழில்முனைவோரின் தேவைகளுக்கு ஏற்ப தொழில் உபகரணங்களுக்கான உதவி வழங்கப்பட்டு, அவர்களின் தொழில் திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கும் அதேவேளையில், குறிப்பாக சிறு தொழில்முனைவோரின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, கணினி மற்றும் குறை கடத்தில் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் பெரிய நிறுவனங்களின் முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதுடன், மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
சீனாவில் மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, பார்வையற்றவர்களுக்கு சிகிச்சையளித்து மீண்டும் பார்வையை வழங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
மேலும், பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட வாழ்க்கைச் செலவினங்களால் மக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.








