சுங்கை பட்டாணி, டிசம்பர்.30-
கடந்த ஆண்டு முதல், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ‘Gang Rames’ என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது, இன்று சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நஜ்வா சே மாட் முன்னிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளானது மொழிபெயர்ப்பாளர் மூலமாகத் தமிழில் வாசிக்கப்பட்டது.
என்றாலும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து குற்ற வாக்குமூலங்கள் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரையில், இக்கும்பலானது கோல மூடா பகுதியிலுள்ள கம்போங் சுங்கை பிரிவில் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகின்றது.
24 முதல் 42 வயதுடைய அந்த 20 பேர் மீதும், கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.








