கோலாலம்பூர், நவம்பர்.14-
வெளிநாட்டுக் கணவர்களை மணந்து, வெளிநாடுகளில் மலேசியத் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே மலேசியக் குடியுரிமை வழங்குவதற்கான சட்டத் திருத்தம், 2026 ஆம் ஆண்டு மத்தியில் அமலுக்கு வரவுள்ளது.
இதனால், வெளிநாடுகளில் திருமணம் செய்துள்ள மலேசியப் பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு, கடந்த ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது சட்டத்துறை அலுவலகம் அதற்கான சட்டத் திருத்தங்கள் மற்றும் விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மதிப்பாய்வு நிறைவடைந்தவுடன் வெளிநாடுகளில் பிறக்கும், மலேசியத் தாய்மார்களின் குழந்தைகளுக்கு இயல்பாகவே மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதி பதிவுப் படிவங்கள் உருவாக்கம், கணினி அமைப்பில் புதுப்பிப்பு மற்றும் உலகளாவிய மலேசியத் தூதரகங்களுக்கு தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.








