மலாக்கா மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரக் காலம் முழுவதும் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் இருப்பையும் பணியையும் மதித்து நடக்க வேண்டும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகப் பணியாளர்கள் தங்களது கடமைகளை ஆற்றும் போது ஏதேனும் அசௌகரியமான அல்லது விரும்பத்தகாத சூழ்நிலைகளை எதிர்கொண்டால், உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஊடக நிறுவனங்களின் செய்திகள் மற்றும் உள்ளடக்கங்கள் உரிய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டாலோ அல்லது மூலத்தைச் சுட்டிக் காட்டாமல் நகலெடுக்கப்பட்டாலோ, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மலேசிய ஊடக மன்றத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயர் குரோ பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தொடர்புத் துறை அமைச்சின் ஊடக மையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபாஹ்மி ஃபாட்சீல், ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு உதவும் வகையில் ஆயர் குரோவில் உள்ள பிரதான ஊடக மையத்துடன், மலாக்கா முழுவதும் நாடி (NADI) எனப்படும் 39 தேசிய தகவல் பரவல் மையங்கள், ஊடக மையங்களாகவும் செயல்பட நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த மையங்கள், செய்தி சேகரிப்புப் பணிகளுக்கு இடையே ஊடகவியலாளர்கள் ஓய்வெடுக்கும் இடங்களாகவும் பயன்படும் என்றார்.
இதனிடையே, மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.
முன்கூட்டியே வாக்குப்பதிவு வரும் நவம்பர் 10-ஆம் தேதியும், பொதுவாக்குப்பதிவு நவம்பர் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலானது அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தொடர்புத் துறை அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அப்துல் ஹாலிம் ஹம்ஸா மற்றும் ஜாபேன் (JAPEN) எனப்படும் தகவல் பிரிவின் தலைமை இயக்குநர் எர்வின் கைருல் அஹ்மாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








