தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பேராக் மாநிலம் தெலுக் இந்தானில் அமைந்துள்ள மெனாரா சொண்டோங் எனப்படும் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் மீண்டும் வண்ணமயமான அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
தெலுக் இந்தான் மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்பை ஜசெக கட்சி ஏற்றது முதல், ஒவ்வோர் ஆண்டும் நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளின்போது இக்கோபுரம் அலங்கரிக்கப்பட்டு வருவதாக ஜசெக கட்சியின் இளைஞர் பிரிவான டாப்சி (DAPSY) தேசியத் தலைவர் வூ கா லியோங் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழும் மலேசியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சி என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளியைக் கொண்டாடும் இந்து மக்களுக்கு மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் நம்பிக்கையின் ஒளி நிறைந்த பண்டிகை வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.








