நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான உதவிகளை ஒருங்கிணைக்க தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சுக்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சங்கங்கள் செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான 2026 சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் தினக் கண்காட்சியின் நிறைவு விழாவில் உரையாற்றிய அன்வார், ஆரம்பத்தில் 1 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள வணிகர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த உதவிகள் மூலம் ஆண்டுதோறும் சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகளின் வருமானம் அதிகரிப்பதை உறுதி செய்ய அரசாங்கம் விரும்புவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








