குறைந்த வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்தவர்கள் உட்பட, சிறு தொழில்முனைவோரின் வர்த்தகத் திறனை மேம்படுத்துவதற்காகக் கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிறு வணிகர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப வழங்கப்படும் குறைந்த அளவிலான நிதியுதவிகூட குறிப்பிடத்தக்க பலனைத் தரும் என்றார்.
உதாரணமாக, பொருட்களைப் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட அடிப்படை உபகரணங்களை வாங்குவதற்கு 1,800 முதல் 5,000 ரிங்கிட் வரை தேவைப்படும் வணிகர்களுக்கு இத்தகைய உதவிகள் நேரடிப் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற உசாஹாவான் பங்கிட் தொழில்முனைவோர் திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், அங்கு சிறு வணிகத் துறையில் முக்கியப் பங்காற்றும் பெண்களின் தொழில் வளர்ச்சிக்கும் அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்கும் என்றார்.
நிகழ்ச்சியில் கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முஹமட் நசுருடின் டாவுட் கலந்து கொண்டார்.








