குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 முதல் 12 வயதுக்குட்பட்ட மியன்மார் சிறுவர்கள் மூவரின் விவகாரத்தில் தலையிடுமாறு மனித உரிமைக் குழுவான தெனாகானிதா, சுஹாகாம் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிறுவர்களுக்கு சட்ட உதவியும் உளவியல் ஆதரவும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் நிர்வாக இயக்குநர் குலோரின் எ டாஸ் வலியுறுத்தினார்.
சிறுவர்களுக்கு கைவிலங்கு பூட்டப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள், ஆரம்பத்தில் பிணை மறுக்கப்பட்டது, மொழிபெயர்ப்பு தொடர்பான சிக்கல்கள் ஆகியவை குழந்தைகளுக்கான சட்டப் பாதுகாப்பு முறையாகப் பின்பற்றப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.
நேற்று உயர் நீதிமன்றம் சிறுவர்களுக்குப் பிணை வழங்கியதை வரவேற்ற அவர், அவர்கள் அனுபவித்திருக்கக்கூடிய அச்சத்தையும் மன உளைச்சலையும் அந்த முடிவு நீக்கிவிடாது என்றும் குறிப்பிட்டார்.








