Nov 1, 2026
Thisaigal NewsYouTube

பாகானில் 56 இந்திய மாணவர்களுக்கு மித்ரா மூலம் மடிக்கணினி, ரொக்க உதவித்தொகை வழங்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகானில் 56 இந்திய மாணவர்களுக்கு மித்ரா மூலம் மடிக்கணினி, ரொக்க உதவித்தொகை வழங்கப்பட்டது

பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பி40 குடும்பங்களின் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா (MITRA) அமைப்பின் நிதியுதவியுடன் மடிக்கணினிகள் மற்றும் ரொக்க உதவித்தொகை வழங்கும் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோரின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, மித்ரா அமைப்பின் நிதியுடன் லிம் குவான் எங் தனது சொந்த மானியத்திலிருந்து கூடுதலாக RM25,000 வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்த இரு மக்கள் பிரதிநிதிகளும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பி40 குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் மடிக்கணினி வாங்குவதற்கான வசதியின்றி, கைப்பேசிகளை மட்டுமே பயன்படுத்தி இணையவழிக் கல்வியைத் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டனர்.

எனவே, மாணவர்களின் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அத்தியாவசியமான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இத்திட்டத்திற்காக ஆரம்பத்தில் மித்ரா அமைப்பின் மூலம் RM150,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனுடன் லிம் குவான் எங் வழங்கிய கூடுதல் RM25,000 நிதியும் இணைக்கப்பட்டு, மொத்த நிதி ஒதுக்கீடு RM175,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் பாகான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டதுடன், மொத்தம் 56 இந்திய மாணவர்களுக்கு தலா RM500 ரொக்க உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

குறிப்பாக, பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களின் தகுதி மற்றும் கல்விப் பின்னணியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் அரசுப் பல்கலைக்கழகங்கள் (IPTA), தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் (IPTS), பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மடிக்கணினி வசதி இல்லாத காரணத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, இணையவழி வகுப்புகள், கல்வி ஆய்வுகள், பாடப்பணிகள் மற்றும் உயர்கல்வி தொடர்பான பல்வேறு தேவைகளுக்கு மடிக்கணினிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும், இத்தகைய கல்வி உதவித் திட்டங்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால், பாகான் தொகுதியைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் பெரும் ஆதரவாக அமையும் என இரு மக்கள் பிரதிநிதிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் உயர்கல்வியில் தொடர்ந்து பயின்று சாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது சமூகத்தின் முக்கியப் பொறுப்பாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →