சித்தியவான், கம்போங் டிராலிக் பகுதியிலுள்ள இந்தியக் குடியிருப்பாளர்கள் 31 பேரின், 50 ஆண்டுகால போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வகையில், அவர்களுக்கான நிலப்பட்டாவை பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வழங்கியுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இக்குடியிருப்பாளர்களின் நிலப்பட்டா விவகாரத்திற்கு தனது தலைமையில் தொடர்ந்து தீர்வு காணப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சுங்கை வாங்கி தோட்டத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நிலப்படா வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்டகால நில உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டதால மக்களின் கனவு நனவானது என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியக் குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நில உரிமையை உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை, அவர்களின் குடும்பங்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று சிவநேசன் தெரிவித்தார்.

அதேவேளையில் நிலப்பட்டா என்பது வெறும் ஆவணம் மட்டுமல்ல, அது ஒருவரின் நில உரிமையை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் குடும்பப் பாதுகாப்புக்கும் எதிர்கால நம்பிக்கைக்கும் அடித்தளமாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த நிலப்பட்டாவைப் பெற்றுக் கொண்ட கம்போங் டிராலிக் இந்தியக் குடியிருப்பாளர்கள் தங்களது 50 ஆண்டுகால போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.








