புத்ராஜெயா, அக்டோபர்.27-
தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மூவார் தொகுதிக்கான மானிய ஒதுக்கீட்டை நிறுத்தியுள்ள அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் மற்றும் அத்தொகுதியில் உள்ள மூன்று வாக்காளர்களும் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி, சைட் சாடிக் செய்து கொண்ட மேல்முறையீட்டிற்கான சார்வு நாள், நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பை மீறியுள்ளதாக ஹாஷிம் ஹம்ஸா தலைமையிலான மூவர் அடங்கிய அப்பீல் நீதிபதி குழுவினர் ஒருமித்தக் கருத்தாக தங்கள் முடிவை அறிவித்தனர்.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட காலக் கட்டத்திற்குள் அந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டில் கால வரம்பு மீறப்பட்டுள்ளது என்று அப்பீல் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.








