பாங்கி, ஜனவரி.11-
நாட்டின் பாதுகாப்புப் படையில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள கொள்முதல் ஊழல் விவகாரம் தொடர்பாக, 60 வயது மதிக்கத்தக்க உயர்நிலை ஆயுதப்படைத் தளபதி ஒருவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், இது நாட்டின் பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் நிர்வாகத் தூய்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த ஊழல் விசாரணை குறித்த முக்கியத் தகவல்களைப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார். ஆயுதப்படை உயர் மட்டத்திலேயே ஊழல் புகார்கள் எழுந்துள்ள சூழலில், நாளை வெளிவரவுள்ள அமைச்சரின் அறிக்கை மலேசிய அரசியலிலும் பாதுகாப்புத் துறையிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.








