Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஸம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோர் மீது நடவடிக்கை இல்லையா ? முடிவை மறுபரிசீலனை செய்வீர்:  நாடாளுமன்ற இந்திய பிரதிநிதிகள் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

ஸம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோர் மீது நடவடிக்கை இல்லையா ? முடிவை மறுபரிசீலனை செய்வீர்: நாடாளுமன்ற இந்திய பிரதிநிதிகள் கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

நாட்டில் இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களான ஸம்ரி வினோத், ஃபிடாவுஸ் வோங் ஆகியோர் மீது நவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிவித்து இருக்கும் சட்டத்துறை அலுவலகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நாடாளுமன்ற இந்திய பிரதிநிதிகள் ஒரு சேரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் டத்தோஸ்ரீ சரவணன், கிள்ளான் எம்.பி. வீ. கணபதி ராவ், சுங்கை சிப்புட் எம்.பி. எஸ். கேசவன் மற்றும் பத்து எம்.பி. P. பிரபாகரன் ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்த இரு சமயப் போதகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த ஓராண்டு காலமாக இந்து தெய்வங்களையும், மதத்தையும் இழிவுப்படுத்தி வரும் போதகர்களான ஸம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் கிட்டத்தட்ட 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இந்து மதத்தை நிந்தித்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அவர்கள் பேசிய காணொளிகளும் சாட்சிப் பொருட்களாக வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் அந்த இரண்டு சமயப் போதகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போதுமான முகாந்திரங்கள் இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் அறிவித்து இருப்பது மலேசிய இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளது என்று மஇகா தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.

இனம், மதம், அரச பரிபாலனம் சம்பந்தப்பட்ட 3ஆர் சட்டவிதி, ஒரு சாராரைப் பாதுகாக்க மட்டுமே பயன்படுத்தப்படுத்தப்படுவது, கண்டிக்கத்தக்கதாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

இனம் மற்றும் சமய விவகாரங்களைச் சீண்டிப் பார்க்க யார் முனைந்தாலும், கட்சிப் பேதங்ககளை ஒதுக்கி விட்டு இந்துக்கள் என்ற உணர்வுடன் குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம் என்று என்பதையும் டத்தோஸ்ரீ சரவணன் சூளுரைத்தார்.

கிள்ளான் எம்.பி. கணபதிராவ் கூறுகையில், அந்த இரு சமயப் போதகர்களும், இந்து சமயத்தின் உணர்ச்சிகரமான விவகாரங்களைத் தொட்டுப் பேசியுள்ளனர் என்பதற்குக் காணொளிகள் உள்ளன.

அந்த காணொளிகளும் சாட்சிப் பொருட்களாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் கூறுகிறது என்றால், அவர்கள் இன்னும் எந்த ஆதாரத்தை எதிர்பார்க்கின்றனர் என்று கணபதி ராவ் கேள்வி எழுப்பினார்.

இது உண்மையிலேயே சட்டத்துறை அலுவலகத்தின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவது போல் உள்ளது என்று கணபதி ராவ் தமது அதிருப்பதியை வெளிப்படுத்தினார்.

Related News