கோலாலம்பூர், அக்டோபர்.13-
ஐரோப்பா சந்தையை இலக்காகக் கொண்டு கடத்தப்படவிருந்ததாக நம்பப்படும் 59 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 173.14 கிலோ எடை கொண்ட கஞ்சா இலைகளும், கஞ்சா பூக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த அக்டோபர் 3, 5 ஆகிய தேதிகளில் 25 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு பெண்களும் ஐந்து ஆடவர்களும் கைது செய்யப்பட்டது மூலம் இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
சுபாங் ஜெயாவில் ஒரு வீட்டில் ஒரு பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டது மூலம் அவர்களின் வீட்டில் 115 பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில் அடுத்து ஐந்து நபர்களும், பெரியளவில் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் மட்டுமின்றி ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.








