நாட்டில் சுமார் 16.4 லட்சம் கிக் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் ‘கிக் தொழிலாளர் சட்டம்’ இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதன் மூலம், ஆசியாவிலேயே கிக் தொழிலாளர்களுக்கெனத் தனிச் சட்டத்தைக் கொண்டு வந்த முதல் நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்கிறது என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இச்சட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வருமான விகிதத்தில் வெளிப்படைத்தன்மை, பாகுபாடற்ற சூழல், பெர்கேசோ மூலமான சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இச்சட்டம் அவர்களின் பணிச் சுதந்திரத்தைப் பாதிக்காது டத்தோஸ்ரீ ரமணன் தெளிவுபடுத்தினார்.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், கிக் தொழிலாளர்கள் தொடர்ந்து நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்ற முடியும்; மேலும், இந்தச் சட்டம் கிக் பொருளாதாரச் சூழலை எந்த வகையிலும் பாதிக்காது," என்று இன்று புத்ராஜெயா மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரமணன் இதனை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுக்குப் பதிலளித்த அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் , இச்சட்டம் மலேசியக் மக்கள் மற்றும் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
தொழிலாளர்களின் குறைந்தபட்ச வருமானம் மற்றும் இதர நலன்கள் குறித்து முடிவெடுக்க 'தேசிய கிக் ஆலோசனை மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான வருமான விகிதம் குறித்து முதற்கட்டமாக விவாதிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.













