கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
குற்றம் இழைத்து இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைப் பிடிப்பதற்கு பொதுமக்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அவ்வாறு பிடிபடும் நபர்கள் மீது பலவந்தம் பயன்படுத்தப்படுவதில் வரம்பு மீறி விட வேண்டாம் என்று குற்றவியல் சட்டத்துறை நிபுணர் ஒருவர் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
பலவந்தம் பயன்படுத்துவதிலும், நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று பிரபல குற்றவியல் வழக்கறிஞர் பல்ஜிட் சிங் பல்ஜிட் சிங் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பதற்கு பொதுமக்களுக்கு குற்றவியல் சட்டம் 27 ஆவது பிரிவு அதிகாரம் வழங்குகிறது. ஆனால், அந்த குற்றவாளிகள் மீது கண்மூடித்தனமாகப் பலவந்தத்தைப் பயன்படுத்தச் சட்டத்தில் இடமில்லை என்று அவர் விளக்கினார்
கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவவை கடுங்குற்றங்களாகக் கருதப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
குற்றவாளிகளைப் பிடித்த அடுத்த கணமே எவ்வித தாமதமின்றி உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தைப் பொதுமக்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பல்ஜிட் சிங் வலியுறுத்தினார்.
கடந்த ஜுலை 27 ஆ ம் தேதி, மலாக்கா, ஜாசின், பெஸ்தாரி ஜெயாவில் ஒரு பேரங்காடி மையத்தின் முன்புறம் ஆபாசச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 51 வயதுடைய ஓர் ஆடவரைப் பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 நாட்களுக்கு முன்பு கோலாலம்பூர், செராஸில் பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவரின் கைப்பையைப் பறிக்க முயற்சித்ததாக நம்பப்படும் வழிபறி கொள்ளையன் ஒருவனை வளைத்துப் பிடித்த பொதுமக்கள், அந்த நபரை அடித்துக் கொன்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விரு சம்பவங்களும் கொலைச் சம்பவங்களாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று நிருபிக்கப்படும் நபர்களுக்கு மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் பல்ஜிட் சிங் நினைவுறுத்தினார்.








