மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி, தங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டதாகக் கூறியதாக அவரது மகன் டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதல் தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த துன் டாக்டர் ஹஸ்மா, நேற்று இரவு குடும்பத்தினர் சந்தித்தபோதும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் கூறினார்.
இன்று காலை 8 மணியளவில் தாயாருக்கு இதயப் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைத்ததும், தாம் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றதாக முக்ரிஸ் தெரிவித்தார்.
மருத்துவர்கள் அவருக்கு இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை வழங்கிய நிலையில், காலை 9 மணியளவில் மேலும் 15 நிமிடங்கள் சிகிச்சை தொடரும் என்றும், இதயம் மீண்டும் செயல்படாவிட்டால் அது நிறுத்தப்படும் என்றும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.








