லங்காவி, பிப்ரவரி.21-
லங்காவி, தஞ்சோங் ரூ கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை நீந்தச் சென்ற போது நீரில் மூழ்கியதாக அஞ்சப்பட்ட சீன நாட்டவரின் உடல் இன்று சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.
ஷாங்காயைச் சேர்ந்த 48 வயதான Mingfei Lan என்பவரின் உடலை பொது பாதுகாப்புப் படையினர் காலை 9.45 மணியளவில் மீட்டதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அஸ்ஹார் நுருடின் தெரிவித்தார்.
தனது மனைவி மற்றும் மகனுடன் விடுமுறைக்கு லங்காவிக்கு வந்திருந்த அந்த நபர், மாலை 5.30 மணியளவில் நீந்துவதற்காக பூலாவ் சாபாங் நோக்கித் தனியாகச் சென்றுள்ளார். மாலை 6 மணியளவில் தனது தந்தை இன்னும் கரை திரும்பாததைக் கண்ட அவரது மகன், ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இரவு 9 மணியளவில் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் தேடுதல் பணியைத் தொடங்கினர் என்று ஏசிபி கைருல் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்ட தேடுதல் பணியின் போது, அந்த சீனப் பிரஜை, கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், பூலாவ் சாபாங் அருகிலுள்ள நீர் பகுதியில் முகம் குப்புறக் கிடந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடல் பிரேத பரிசோதனைக்காக லங்காவி, சுல்தானா மாலிஹா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.








