பாலிக் பூலாவ், நவம்பர்.08-
கனத்த மழைக்கு வித்திடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்குப் பருவ மழை தொடங்கிவிட்டதால் இடரை ஏற்படுத்தக்கூடிய நாடு முழுவதும் உள்ள சுமார் 2 ஆயிரம் மலைச்சாரல்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட அனைத்து மலைசாரல்களின் ஆபத்து தன்மை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு விட்டன. அவற்றின் நிலைக்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளும், உரிய கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அலெக்ஸண்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் மொத்தம் 27 ஆயிரம் மலைச்சாரல்கள் உள்ளன. இவற்றில் இரண்டாயிரம் இடர் தன்மைக்கு உரியவை என்று பினாங்கு, ஜாலான் பாலிக் பூலாவ் – தெலுக் பாஹாங் சாலையில் மலைச்சாரல் சீரமைப்புப் பணியைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.








