கோலாலம்பூர், ஜனவரி.06-
புக்கிட் அமான் தலைமையகம் மற்றும் மாநில காவற்படை மட்டங்களில் உள்ள முக்கியக் பதவிகளுக்கு, பல மூத்த அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் நியமனங்களை அரச மலேசியப் போலீஸ் படையான பிடிஆர்எம் இன்று அறிவித்துள்ளது.
அதன் படி, புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி, புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறையான JPJKK-வின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், JPJKK இயக்குநர் டத்ய்தோ வான் ஹசான் வான் அஹ்மாட், ஐஜிபி செயலகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
IGP செயலகத்தைச் சேர்ந்த பண மோசடி தடுப்புக் குற்றப் புலனாய்வுக் குழுவின் தலைவரான டத்தோ ஶ்ரீ முஹமட் ஹஸ்புல்லா அலி, புக்கிட் அமான் JSPT-இன் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிபு மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி சுஹைலி, சரவாக் படைப்பிரிவு மேலாண்மைத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சரவாக் படைப்பிரிவின் ஒருமைப்பாடு மற்றும் தர இணக்கத் துறையின் தலைவர் ரொசலீனா டாவுட் மாநில குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், மூவார் போலீஸ் தொழில்நுட்பக் கழகத்தின், இயந்திரவியல் துறை ஆய்வு மையத்தின் தலைவரான பொஸ்லான் இப்ராஹிம், புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தர இணக்க இலாக்காவின் முதன்மை உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட நியமன அறிவிப்புகளை பிடிஆர்எம் செயலாளர் அப்துல் ரஹ்மான் காசிம் இன்று வெளியிட்டுள்ளார்.








