Sep 17, 2026
Thisaigal NewsYouTube
தொழில் நிறுவனங்களுக்கு 15 பில்லியன் நிதி: குஸ்கோப் நடவடிக்கைக்கு எஃப்எம்பிஏ வரவேற்பு
தற்போதைய செய்திகள்

தொழில் நிறுவனங்களுக்கு 15 பில்லியன் நிதி: குஸ்கோப் நடவடிக்கைக்கு எஃப்எம்பிஏ வரவேற்பு

Share:

மலேசியாவில் சிறு, நடுத்தர மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களை சமாளிக்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி உதவி நடவடிக்கைகளை மலேசிய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FMBA) வரவேற்றுள்ளது.

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகமான குஸ்கோப், 2026ஆம் ஆண்டில் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் 15 பில்லியன் ரிங்கிட் வரை நிதி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, இதில் சுமார் 9 பில்லியன் ரிங்கிட் நிதி அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் தொழில் முனைவோர் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தொழில் நடத்தும் செலவுகள், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் வருவாய் அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு நிதி உதவி மிகவும் முக்கியமானது என எஃப்எம்பிஏ தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் மாலிக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் நிறுவனங்களுக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்யும் குஸ்கோப்பின் முயற்சியை அவர் பாராட்டியுள்ளார்.

கடன் தவணை ஒத்திவைப்பு உதவியை விரிவுபடுத்த கோரிக்கை

இதனிடையே தற்காலிக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு, கடன் தவணைகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்கும் உதவியை மேலும் பரவலாக வழங்க வேண்டும் என்றும் எஃப்எம்பிஏ கோரியுள்ளது. சில வங்கிகள் ஏற்கனவே நிறுவனங்களின் நிலைமையை தனித்தனியாக மதிப்பீடு செய்து இத்தகைய உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறுகையில், தற்காலிக நிதி நெருக்கடியில் இருக்கும் நிறுவனங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குவதும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டு நிதியைப் பெற்றுத் தருவதும் அரசின் முக்கிய நோக்கம் என்றார்.

கடன் தவணை ஒத்திவைப்பு உதவி தேவைப்படும் நிறுவனங்கள் தங்களது வங்கிகளை நேரடியாக அணுகலாம் என்றும், தற்போதைய நடைமுறைகளில் தடைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி நடைமுறை தீர்வுகளை உருவாக்க குஸ்கோப் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு, வங்கிகள் மற்றும் தொழில் துறையினருக்கு இடையிலான தொடர் கலந்துரையாடல் மூலம், தேவையுள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 200 வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FMBA), 7 லட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related News