நெகிரி செம்பிலான் மாநிலம் நீலாய் அருகே வடக்கு நோக்கிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், பழுதாகி நின்ற காரின் மீது லாரி மோதியதில் 32 வயது பெண் உயிரிழந்தார்.
அவரது சகோதரி மற்றும் காருக்கு உதவ வந்த 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இன்று காலை சுமார் 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மலாக்காவிலிருந்து பேராக் நோக்கிச் சென்ற பெரோடுவா அஸியா கார் பழுதாகி இடதுபுறத்தில் இருந்து இரண்டாவது பாதையில் நின்றிருந்தது.
அப்போது அவர்களுக்கு உதவுவதற்காக அவங்கு வந்த மோட்டார் சைக்கிளோட்டியையும் சேர்த்து, பின்னால் வந்த லாரி காரின் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் அக்காரை செலுத்திய பெண் ஓட்டுநர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், காரில் பயணித்த 39 வயது பெண் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டி, துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








