மூத்த வழக்கறிஞரும், முன்னாள் இரண்டு தவணை சுங்கை வே சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினருமான வி.எல். கந்தன் நேற்று தனது 89-வது வயதில் காலமானார்.
கிள்ளானில் பிறந்த கந்தன், முன்னாள் மஇகா தலைவரும் 1974 முதல் 1979-ஆம் ஆண்டு வரை தொழிலாளர் அமைச்சராக இருந்த மறைந்த வி. மாணிக்கவாசகத்தின் இளைய சகோதரர் ஆவார்.
தனது சகோதரரைப் போலவே பொது வாழ்க்கையில் ஈடுபட்ட அவர், 1974 முதல் 1982 வரை இரண்டு தவணைகள் சுங்கை வே சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
மேலும், சட்டத்துறையில் நுழைவதற்கு முன்பு சுமார் 5 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய கந்தன், பின்னர் பிரிட்டனுக்குச் சென்று சட்டம் பயின்று, அங்கு ஆங்கில வழக்கறிஞர் தகுதி பெற்றார். மலேசியா திரும்பிய அவர், 1965-ஆம் ஆண்டு மலேசிய வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்தார்.
Shearn Delamore & Co நிறுவனத்தில் சிறப்பான சட்டப் பணியை மேற்கொண்ட அவர், குறிப்பாக அறிவுசார் சொத்துரிமைச் சட்டத் துறையில் முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்டார். மலேசியா மற்றும் பிராந்தியத்தில் அறிவுசார் சொத்துரிமை சட்ட நடைமுறையின் வளர்ச்சியிலும் பங்காற்றிய அவர், ஆசியான் அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
அவருக்கான இறுதிச் சடங்குகள் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 2 மணிக்கு ஜாலான் 51A/229-ல் உள்ள கம்போங் துங்கு தகன மையத்தில் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








