மேம்படுத்தப்பட்ட புதிய மைகாட் அடையாள அட்டையின் தோற்றமானது தேசியப் பதிவிலாகாவான ஜேபிஎன்னால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மைகாட்டில் வெளிப்படையான சாளரம், இரட்டை இணைப்பு சிப், மாறும் பாதுகாப்பு ஹோலோகிராம் மற்றும் கியூஆர் குறியீடு உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
நீண்டகால தினசரி பயன்பாட்டைத் தாங்கும் வகையில் அதிக நீடித்த தன்மை கொண்ட போலிகார்போனாட் பொருளில் இந்த புதிய மைகாட் ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், Guilloche எனப்படும் நுணுக்கமான கோடுகள், பார்வைக் கோணத்திற்கு ஏற்ப நிறம் மாறும் வானவில் அச்சு ஆகியவையும் இதில் இடம் பெற்றுள்ளன.
மேலும், அடையாள விவரங்கள் மற்றும் புகைப்படம் அட்டையின் உள் அடுக்குகளில் நேரடியாக லேசர் எட்சிங் முறையில் பதிக்கப்படுவதால், அவற்றை சேதப்படுத்தாமல் மாற்றுவது கடினம் என ஜேபிஎன் தெரிவித்துள்ளது.
மேலும், புகைப்பட மோசடி மற்றும் அடையாளத் திருட்டைத் தடுக்கும் வகையில் சிறிய அளவிலான இரண்டாவது Laser-engraved புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
முன்னைய மைகாட்டில் 23 பாதுகாப்பு அம்சங்கள் இருந்த நிலையில், புதிய மைகாட்டில் 53 பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புதிய மைகாட்டை நாளை முதல் ஜேபிஎன் வழங்கத் தொடங்குகிறது.
நாடு முழுவதும் உடனடி அச்சிடும் வசதியுள்ள 40 ஜேபிஎன் கிளைகளில் விண்ணப்பித்த அதே நாளில் புதிய மைகாட் ஆனது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடும் வசதி இல்லாத கிளைகளில் விண்ணப்பங்கள் 5 வேலை நாட்களில் செயல்படுத்தப்படும் என்றும் ஜேபிஎன் தெரிவித்துள்ளது.








