Sep 16, 2026
Thisaigal NewsYouTube
2030-ஆம் ஆண்டிற்குள் 4-ஆவது படைப்பிரிவாக சைபர் படை உருவாக்கப்படும் - மலேசிய ஆயுதப்படை தகவல்
தற்போதைய செய்திகள்

2030-ஆம் ஆண்டிற்குள் 4-ஆவது படைப்பிரிவாக சைபர் படை உருவாக்கப்படும் - மலேசிய ஆயுதப்படை தகவல்

Share:

மலேசிய ஆயுதப்படை, வரும் 2030-ஆம் ஆண்டிற்க்குள் சைபர் படையை 4-ஆவது படைப்பிரிவாக உருவாக்கி செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

நவீன பாதுகாப்புச் சூழலில் சைபர் வெளி மற்றும் மின்காந்தத் துறைகள் போட்டி மற்றும் போருக்கான புதிய களங்களாக மாறி வருவதே இதற்குக் காரணம் என ஆயுதப்படைத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ மாலேக் ரஸாக் சுலைமான் தெரிவித்துள்ளார்.

சைபர் படையை உருவாக்குவதற்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அமைப்பு மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுக்க சைபர் படை முன்னெடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தக் குழு வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 19-ஆம் தேதி, பேராக் மாநிலம் லூமுட் கடற்படைத் தளத்தில் நடைபெறும் 2026 ஆயுதப்படை தினக் கொண்டாட்டத்தையொட்டி தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் மூலம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

சைபர் படையை உருவாக்குவது அவசரத் தேவையாக இருப்பதாகவும், பிற நாடுகள் ஏற்கனவே இது போன்ற படைப் பிரிவுகளை உருவாக்கியுள்ள நிலையில் மலேசியா பின்தங்க முடியாது என்றும் மாலேக் ரஸாக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சைபர் மற்றும் மின்காந்த நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவத்தை ஆயுதப்படை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும், இதுவரை விமானப் படையைச் சேர்ந்த 60 அதிகாரிகள் மற்றும் 17 இதர நிலை வீரர்கள் சைபர் படை மற்றும் மின்காந்தம் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News