படுகொலை செய்யப்பட்ட மாணவி ஐரின் சோஃபியா முஹமட் கைருல் ஃபைசால் பயின்ற பள்ளியில் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளியின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இது குறித்து ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் வெளியிட்டுள்ள தகவலில், பள்ளி மண்டபம், உணவகம், தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.
மேலும், ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் ஃகாஸியுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான செலவை ஏற்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூனுடன் பள்ளியை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மசீச கட்சியின் தலைவருமான டாக்டர் வீ கா சியோங், தாமும் லிங் தியான் சூனுடன் அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில், பள்ளியின் பிற பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்குவதாக உறுதியளித்தார்.
அதேவேளையில், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த, பள்ளி நிர்வாகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
16 வயதான ஐரின் சோஃபியா, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக 16 வயது சக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.








