கோலாலம்பூர், ஜனவரி.29-
1எம்டிபி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் குற்றமற்றவர் எனக் கூறி அப்போது வழக்கை மூடி மறைத்து நாடகமாடிய முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் அபாண்டி அலி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வழக்கறிஞர் சங்கீட் கவுர் தியோ கேள்வி எழுப்பியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு அபாண்டி மீது தொடங்கப்பட்ட அதிகார துஷ்பிரயோக விசாரணை, வெறும் மூன்றே மாதங்களில் எவ்வித மேல் நடவடிக்கையும் இன்றி “no further action” என்று கூறி, அவசர அவசரமாக முடிக்கப்பட்டது ஏன் என சங்கீட் கவுர் சாடியுள்ளார்.
முன்னதாக, நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் சவுதி அரச குடும்பத்தின் 'நன்கொடை' என்ற வாதத்தை அபாண்டி அலி அப்படியே ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தார். ஆனால், அண்மையில் நீதிமன்ற விசாரணையின் போது அந்த 42 மில்லியன் ரிங்கிட் சவுதி நன்கொடை அல்ல என்பதை நஜிப் ஒப்புக் கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக மேல் விசாரணை செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டும், அதனைப் புறக்கணித்து அபாண்டி அலி ஏன் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் என்பதை நீதிமன்றமே முன்னதாகச் சுட்டிக் காட்டியிருந்தது.
ஒரு நாட்டின் சட்டத்துறை தலைவராகவும், பிறருக்கு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டிய ஒருவர், ஆதாரங்களைச் சரியாகச் சரி பார்க்காமல் உண்மையை மறைக்க முயன்றது சாதாரண விஷயமல்ல என்று சங்கீட் கவுர் கூறியுள்ளார்.
அபாண்டி சம்பந்தப்பட்ட இவ்வளவு பெரிய முறைகேடு புகாரைப் போலீசார் ஏன் இவ்வளவு விரைவாக மூடினார்கள் என்பதையும், அதில் உண்மையாக என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பதையும் அரசாங்கம், நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சங்கீட் கவுர் வலியுறுத்தியுள்ளார்.








